Add parallel Print Page Options

சவுல் மனம் மாறுதல்

சவுல் கர்த்தரின் சீஷரைப் பயமுறுத்தவும், கொல்லவும் எப்பொழுதும் முயன்று கொண்டிருந்தான். எனவே அவன் தலைமை ஆசாரியனிடம் சென்றான். தமஸ்கு நகரத்தில் ஜெப ஆலயங்களிலுள்ள யூதர்களுக்குக் கடிதங்களை எழுதுமாறு அவரைக் கேட்டான். தமஸ்குவில் கிறிஸ்துவின் வழியைப் பின்பற்றுகிற சீஷர்களைக் கண்டுபிடிக்கும் அதிகாரத்தை அவனுக்குக் கொடுக்குமாறு தலைமை ஆசாரியரைக் கேட்டான். அங்கு ஆணோ, பெண்ணோ, விசுவாசிகள் எவரையேனும் கண்டால் அவன் அவர்களைக் கைதுசெய்து எருசலேமிற்குக் கொண்டு வர விரும்பினான்.

எனவே சவுல் தமஸ்குவிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நகரத்திற்கு அருகே வந்தபோது, அவனைச் சுற்றிலும் மிகுந்த பிரகாசமான ஒளி வானிலிருந்து திடீரென வெளிச்சமிட்டது. சவுல் தரையில் விழுந்தான். அவன் தன்னோடு பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். “சவுலே, சவுலே! நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய்?” என்றது அச்சத்தம்.

சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான்.

அந்தச் சத்தம் பதிலாக, “நான் இயேசு, நீ புண்படுத்த நினைப்பது என்னையே. நீ எழுந்து நகரத்துக்குள் போ. அங்கிருக்கும் ஒருவர் நீ செய்ய வேண்டியதை உனக்குக் கூறுவார்” என்றது.

சவுலோடு பயணம் செய்த மனிதர் நின்றனர். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மனிதர் சத்தத்தைக் கேட்டனர். ஆனால் யாரையும் பார்க்கவில்லை. சவுல் தரையிலிருந்து எழுந்தான். அவன் கண்களைத் திறந்தபோது அவனால் பார்க்க முடிய வில்லை. எனவே சவுலோடு வந்த மனிதர்கள் அவன் கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றனர். மூன்று நாட்கள் சவுலால் பார்க்க முடியவில்லை. அவன் எதையும் உண்ணவோ, எதையும் பருகவோ இல்லை.

10 தமஸ்குவில் இயேசுவின் சீஷன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அனனியா. கர்த்தர் ஒரு தரிசனத்தில் அவனிடம் வந்து பேசினார். கர்த்தர், “அனனியாவே!” என்று அழைத்தார்.

அனனியா பதிலாக, “ஆண்டவரே, இதோ இருக்கிறேன்” என்றான்.

11 கர்த்தர் அனனியாவை நோக்கி, “எழுந்து நெடும்வீதி எனப்படும் தெருவுக்குப் போ. யூதாஸின் [a] வீட்டைக் கண்டுபிடி. தர்சு நகரத்தின் சவுல் என்ற மனிதனுக்காக விசாரி. அவன் அங்குப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறான். 12 சவுல் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில் அனனியா என்றொரு மனிதன் அவனிடம் வந்து கரங்களை அவன்மீது வைத்தான். அப்போது சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது” என்றார்.

13 ஆனால் அனனியா பதிலாக, “ஆண்டவரே பல மக்கள் இம்மனிதனைக் குறித்து எனக்குக் கூறியிருக்கிறார்கள். எருசலேமிலுள்ள உமது தூய மக்களுக்கு இந்த மனிதன் செய்த தீமைகளை அவர்கள் எனக்குச் சொன்னார்கள். 14 இப்போது அவன் இங்கு தமஸ்குவுக்கு வந்துள்ளான். உம்மில் விசுவாசம் வைக்கிற எல்லோரையும் கைது செய்யும் அதிகாரத்தைத் தலைமைப் போதகர்கள் அவனுக்கு அளித்துள்ளனர்” என்றான்.

15 ஆனால் கர்த்தர் அனனியாவிடம், “போ! நான் சவுலை ஒரு முக்கிய வேலைக்காகத் தேர்ந்துள்ளேன். அவன் மன்னருக்கும், யூத மக்களுக்கும் பிற நாடுகளுக்கும் என்னைப்பற்றிச் சொல்லவேண்டும். 16 என் பெயருக்காக அவன் படவேண்டிய துன்பங்களை நான் சவுலுக்குக் காட்டுவேன்” என்றார்.

17 எனவே அனனியா புறப்பட்டு, யூதாஸின் வீட்டிற்குச் சென்றான். அவன் தனது கைகளைச் சவுலின் மீது வைத்து, “சவுலே, எனது சகோதரனே, கர்த்தர் இயேசு என்னை அனுப்பினார். நீ இங்கு வந்துகொண்டிருந்தபொழுது வழியில் நீ பார்த்தவரும் அவரே. நீ மீண்டும் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியால் நிரம்பவும் இயேசு என்னை இங்கு அனுப்பினார்” என்றான். 18 உடனே மீன் செதில்கள் போன்றவை சவுலின் கண்களிலிருந்து விழுந்தன. சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது. சவுல் எழுந்து ஞானஸ்நானம் பெற்றான். 19 அவன் ஆகாரம் உண்டு, பலம் பெற்றவனாக உணர்ந்தான்.

சவுல் தமஸ்குவில் போதித்தல்

சில நாட்கள் தமஸ்குவில் சவுல் இயேசுவின் சீஷர்களோடு இருந்தான். 20 ஜெப ஆலயங்களில் இயேசுவைக் குறித்துப் போதிக்க ஆரம்பித்தான். மக்களுக்கு, “இயேசு தேவனுடைய குமாரன்!” என்று கூறினான்.

21 சவுலைக் கேட்ட எல்லா மக்களும் வியப்புற்றனர். அவர்கள், “இவன் எருசலேமிலிருந்த அதே மனிதன். இந்தப் பெயரை நம்பிய மக்களை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தான்! அவன் இங்கும் அதைச் செய்வதற்காகவே வந்தான். இயேசுவின் சீஷர்களைக் கைது செய்து எருசலேமிலுள்ள தலைமை ஆசாரியர்களிடம் அழைத்துச் செல்வதற்கு வந்தான்” என்றனர்.

22 ஆனால் சவுலோ மென்மேலும் வல்லமையில் பெருகினான். அவன் இயேசுவே கிறிஸ்து என நிரூபித்தான். தமஸ்குவில் அவன் சான்றுகள் வலுவாக இருந்தபடியால் யூதர்கள் அவனோடு வாக்குவாதம் செய்ய இயலவில்லை.

சவுல் தப்பிச் செல்லுதல்

23 பல நாட்களுக்குப் பிறகு, யூதர்கள் சவுலைக் கொல்லத் திட்டமிட்டனர். 24 சவுலுக்காக நகரத்தின் கதவுகளை இரவும் பகலும் யூதர்கள் காவல் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் அவனைக் கொல்ல விரும்பினர். ஆனால் சவுல் அவர்களின் சதித்திட்டத்தைக் குறித்துச் சொல்லப்பட்டிருந்தான். 25 ஒரு நாள் இரவில் சில சீஷர்கள் அவன் நகரத்திலிருந்து வெளியேறுவதற்கு உதவினர். சீஷர்கள் அவனை ஒரு கூடையில் வைத்தனர். நகரக் கோட்டையிலிருந்த ஒரு துவாரத்தின் வழியாக கூடையை இறக்கி அவனை வெளியே விட்டனர்.

எருசலேமில் சவுல்

26 பிறகு சவுல் எருசலேமுக்குச் சென்றான். சீஷர் குழுவில் சேர்ந்துகொள்ள அவன் முயற்சித்தான். ஆனால் அவர்கள் எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர். சவுல் உண்மையாகவே இயேசுவைப் பின்பற்றுகிறவன் என்பதை அவர்கள் நம்பவில்லை. 27 ஆனால் பர்னபா சவுலை ஏற்றுக் கொண்டு அவனை அப்போஸ்தலரிடம் அழைத்து வந்தான். பர்னபா அப்போஸ்தலருக்கு, தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் சவுல் கர்த்தரை தரிசித்ததைச் சொன்னான். கர்த்தர் சவுலிடம் பேசிய வகையை பர்னபா அப்போஸ்தலருக்கு விளக்கினான். பின் அவன் அப்போஸ்தலர்களுக்கு இயேசுவுக்காக பயமின்றி தமஸ்குவில் மக்களுக்கு சவுல் போதித்ததையும் சொன்னான்.

28 சவுலும் சீஷரோடு தங்கினான். பயமின்றி கர்த்தரைப் பற்றி எருசலேமின் எல்லா பகுதிகளுக்கும் சென்று போதித்தான். 29 கிரேக்கமொழி பேசிய யூதரிடம் சவுல் அவ்வப்போது பேசினான். அவர்களோடு விவாதங்கள் நடத்தினான். ஆனால் அவனைக் கொல்வதற்கு அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். 30 சகோதரர்கள் இதைப்பற்றி அறிந்தபோது அவர்கள் சவுலை செசரியா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். செசரியாவிலிருந்து தர்சு நகரத்திற்கு அவர்கள் சவுலை அனுப்பினர்.

31 யூதேயா, கலிலேயா, சமாரியா, ஆகிய இடங்களிலுள்ள சபையினர் அமைதியுடன் வாழ்ந்தார்கள். பரிசுத்த ஆவியானவரின் உதவியால் வலிமையூட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வாழ்ந்த வகையால் கர்த்தரை அவர்கள் மதித்தனர் என்பதை விசுவாசிகள் காட்டினர். ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் உதவியினால் விசுவாசிகள் குழு பெருகி வளர்ந்தது.

லித்தா மற்றும் யோப்பாவில் பேதுரு

32 எருசலேமைச் சுற்றிலுமிருந்த எல்லா ஊர்கள் வழியாகவும் பேதுரு பயணமானான். லித்தாவில் வாழ்ந்த விசுவாசிகளை [b] அவன் சந்தித்தான். 33 அங்கு பக்கவாத வியாதியால் பீடிக்கப்பட்ட ஐனேயா என்ற பெயருள்ள ஒருவனை அவன் கண்டான். கடந்த எட்டு ஆண்டுகளாக ஐனேயாவால் அவனது படுக்கையை விட்டு நகர முடியவில்லை. 34 பேதுரு அவனிடம், “ஐனேயாவே, இயேசு கிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார். எழுந்து உன் படுக்கையை மடக்கு. உன்னால் இப்போது இதனைச் செய்ய முடியும்!” என்றான். ஐனேயா உடனே எழுந்து நின்றான். 35 லித்தாவில் வாழ்ந்த எல்லா மக்களும் சாரோனின் மக்களும் அவனைக் கண்டனர். இம்மக்கள் கர்த்தரிடம் திரும்பினார்கள்.

36 யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருள்ள இயேசுவின் சீஷப் பெண் இருந்தாள். (அவளது கிரேக்க பெயரான, தொர்காள், “மான்” எனப் பொருள்பட்டது) அவள் மக்களுக்கு எப்போதும் நன்மையையே செய்தாள். தேவைப்பட்ட மக்களுக்குப் பண உதவியும் செய்து வந்தாள். 37 பேதுரு லித்தாவிலிருக்கும்போது, தபித்தா நோய்வாய்ப்பட்டு இறந்தாள். அவர்கள் அவளது சரீரத்தைக் கழுவி மாடியில் ஓர் அறையில் வைத்திருந்தனர். 38 யோப்பாவில் சீஷர்கள் பேதுரு லித்தாவில் இருப்பதைக் கேள்விப்பட்டனர். (லித்தா யோப்பாவுக்கு அருகிலுள்ளது). எனவே அவர்கள் இரண்டு மனிதர்களைப் பேதுருவிடம் அனுப்பினர். அவர்கள் அவனிடம் “விரைந்து எங்களிடம் சீக்கிரம் வாரும்!” என்று வேண்டினர்.

39 பேதுரு தயாராகி அவர்களோடு போனான். அவன் வந்து சேர்ந்தபொழுது அவனை மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். விதவைகள் எல்லோரும் பேதுருவைச் சூழ்ந்து நின்றனர். அவர்கள் அழுதுகொண்டிருந்தனர். தொர்காள் உயிரோடிருந்தபோது செய்த அங்கிகளையும் பிற ஆடைகளையும் பேதுருவுக்குக் காட்டினர். 40 பேதுரு எல்லா மக்களையும் அறைக்கு வெளியே அனுப்பினான். அவன் முழங்காலில் நின்று பிரார்த்தனை செய்தான். பின் அவன் தபித்தாவின் சரீரத்துக்கு நேராகத் திரும்பி, “தபித்தாவே, எழுந்து நில்!” என்றான். அவள் கண்களைத் திறந்தாள். அவள் பேதுருவைக் கண்டபோது, எழுந்து அமர்ந்தாள். 41 அவன் அவளுக்கு நேராகக் கையை நீட்டி, அவள் எழுந்திருக்கும்படி உதவினான். பின் அவன் விசுவாசிகளையும், விதவைகளையும் அறைக்குள் அழைத்தான். அவர்களுக்குத் தபித்தாவைக் காட்டினான். அவள் உயிரோடிருந்தாள்!

42 யோப்பாவிலுள்ள மக்கள் எல்லோரும் இதனை அறிந்தனர். அவர்களில் பலர் கர்த்தரை நம்பினர். 43 பேதுரு யோப்பாவில் பல நாட்கள் தங்கினான். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயருள்ள ஒரு மனிதனோடு அவன் தங்கினான்.

Footnotes

  1. அப்போஸ்தலர் 9:11 யூதாஸ் இவன் அப்போஸ்தலனாகிய யூதாஸ் அல்ல.
  2. அப்போஸ்தலர் 9:32 விசுவாசிகள் பரிசுத்தமானவர்கள். இயேசுவில் விசுவாசமுடையோரின் பெயர்.