Add parallel Print Page Options

தேவன் இஸ்ரவேலின் காவல்காரனாக எசேக்கியேலைத் தெரிந்தெடுக்கிறார்

33 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, உன் ஜனங்களிடம் பேசு. அவர்களிடம் கூறு, ‘நான் இந்த நாட்டிற்கு விரோதமாகப் போரிட பகைவரைக் கொண்டுவருவேன். அது நிகழும்போது, ஜனங்கள் ஒரு மனிதனைத் தங்கள் காவல்காரனாகத் தேர்ந்தெடுத்தனர். இந்தக் காவல்காரன், பகை வீரர்கள் வருவதைப் பார்க்கும்போதும் எக்காளத்தை ஊதி ஜனங்களை எச்சரிப்பான். ஜனங்கள் எச்சரிக்கையைக் கேட்டாலும் அதனைப் புறக்கணித்தால் எதிரிகள் அவர்களைக் கைப்பற்றிச் சிறையெடுத்துச் செல்வார்கள். அவனது சொந்த மரணத்திற்கு அவனே பொறுப்பாவன். அவன் எக்காளத்தைக் கேட்டான், ஆனால் எச்சரிக்கையைப் புறக்கணித்தான். எனவே அவனது மரணத்திற்கு அவனே காரணமாகிறான். அவன் எச்சரிக்கையில் கவனம் செலுத்தியிருந்தால், பிறகு அவன் தன் சொந்த வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்க முடியும்.

“‘ஆனால் காவல்காரன் பகை வீரர்கள் வருவதைக் கண்டும் அவன் எக்காளம் ஊதவில்லை என்றால், அவன் ஜனங்களை எச்சரிக்கவில்லை, பகைவன் அவர்களைக் கைப்பற்றிச் சிறையெடுத்துச் செல்வான். அந்த மனிதன் கொல்லப்படலாம். ஏனென்றால், அவன் பாவம் செய்திருக்கிறான். ஆனால் காவல்காரனும் அந்த ஆளின் மரணத்திற்குப் பொறுப்பாளி ஆவான்.’

“இப்பொழுது, மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்துக்கு உன்னைக் காவல்காரனாக நான் தேர்ந்தெடுக்கிறேன். எனது வாயிலிருந்து செய்தியை நீ கேட்டால், எனக்காக ஜனங்களை எச்சரிக்க வேண்டும். நான் உனக்குச் சொல்லலாம்: ‘இந்தக் கெட்ட மனிதன் மரிப்பான்.’ பிறகு நீ எனக்காகப் போய் அவனை எச்சரிக்க வேண்டும். நீ அந்தப் பாவியை எச்சரிக்காமல் அவனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்படி சொல்லாவிட்டால், பிறகு அவன் தான் செய்த பாவத்துக்காக மரிப்பான். ஆனால் அவனது மரணத்திற்கு நான் உன்னைப் பொறுப்பாளியாக்குவேன். ஆனால் நீ அந்தப் பாவியைத் தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்படியும், பாவம் செய்வதை நிறுத்தும்படியும் எச்சரிக்கை செய்தும் அவன் பாவம் செய்வதை நிறுத்த மறுத்துவிட்டால், பின் அவன் மரிப்பான். ஏனென்றால், அவன் பாவம் செய்தவன். ஆனால் நீ உன்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கிறாய்.

ஜனங்களை அழிக்க தேவன் விரும்புகிறதில்லை

10 “எனவே, மனுபுத்திரனே, எனக்காக இஸ்ரவேல் வம்சத்தாரிடம் பேசு. அந்த ஜனங்கள் சொல்லலாம்: ‘நாங்கள் பாவம் செய்து சட்டங்களை மீறினோம். எங்கள் பாவங்கள் தாங்கமுடியாத அளவிற்குப் பாரமானவை. அந்தப் பாவங்களால் நாங்கள் கெட்டுப்போனோம். நாங்கள் உயிர் வாழ என்ன செய்யவேண்டும்?’

11 “நீ அவர்களிடம் சொல்ல வேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: என் உயிரின் மேல் ஆணையிடுகிறேன், நான் ஜனங்கள் மரிப்பதை, பாவிகள் கூட மரிப்பதைப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைவதில்லை. அவர்கள் மரிப்பதை நான் விரும்புவதில்லை. அந்தப் பாவி ஜனங்களும் என்னிடம் திரும்பி வருவதையே நான் விரும்புகிறேன். நான், அவர்கள் வாழ்வை மாற்றிக்கொண்டு உண்மையான வாழ்க்கை வாழ்வதை விரும்புகிறேன். எனவே என்னிடம் திரும்பி வா. தீமை செய்வதை நிறுத்து. இஸ்ரவேல் வம்சத்தாரே நீங்கள் ஏன் மரிக்க வேண்டும்?’

12 “மனுபுத்திரனே, உன் ஜனங்களிடம் சொல்: ‘ஒருவன் தீயவனாக மாறிப் பாவம் செய்யத் தொடங்குவானேயானால் அவன் முன்பு செய்த நன்மைகள் எல்லாம் அவனைக் காப்பாற்றாது. ஒருவன் தீமையிலிருந்து மாறிவிடுவானேயானால் அவன் முன்பு செய்த தீமைகள் அவனை அழிக்காது. எனவே, ஒருவன் பாவம் செய்யத் தொடங்கினால் அவன் முன்பு செய்த நன்மைகள் அவனைக் காப்பாற்றாது என்பதை நினைவில் வைத்துக்கொள்.’

13 “நான் ஒரு நல்லவனிடம் நீ வாழ வேண்டும் என்று சொல்லலாம். ஒருவேளை அவன் தான் முன்பு செய்த நன்மைகள் தன்னைக் காப்பாற்றும் என்று நினைக்கலாம். எனவே, அவன் தீமைகள் செய்யத் தொடங்கலாம். நான் அவன் முன்பு செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கமாட்டேன்! இல்லை, அவன் தான் செய்யத் தொடங்கிவிட்ட பாவத்தால் மரிப்பான்.

14 “அல்லது நான் ஒரு தீயவனிடம் அவன் மரிப்பான் என்று சொல்லலாம். ஆனால், அவன் தன் வாழ்க்கையை மாற்றலாம். அவன் பாவம் செய்வதை நிறுத்தி, சரியான வழியில் வாழத் தொடங்கலாம். அவன் நல்லவனாகவும் நியாயமானவனாகவும் ஆகலாம். 15 அவன் கடன் கொடுத்தபோது பெற்ற பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். அவன் திருடிய பொருளையும் திருப்பிக் கொடுக்கலாம். அவன் வாழ்வைத் தருகிற நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றத் தொடங்கலாம். அவன் தீமை செய்வதை நிறுத்திவிடுகிறான். பிறகு அவன் நிச்சயம் வாழ்வான். அவன் மரிக்கமாட்டான். 16 அவன் முன்பு செய்த தீமைகளை நான் நினைத்துப் பார்க்கமாட்டேன். ஏனென்றால், அவன் இப்பொழுது நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருக்கிறான். எனவே அவன் வாழ்வான்!

17 “ஆனால் உங்கள் ஜனங்கள், ‘அது சரியன்று! எனது கர்த்தராகிய ஆண்டவர் அவ்வாறு இருக்க முடியாது!’ என்கிறார்கள்.

“ஆனால் அவர்களோ நேர்மையில்லாத ஜனங்களாய் இருக்கிறார்கள். அவர்களே மாறவேண்டிய ஜனங்களாக இருக்கிறார்கள். 18 ஒரு நல்லவன் தான் செய்யும் நன்மைகளை நிறுத்திப் பாவம் செய்யத் தொடங்கினால், பிறகு அவன் தன் பாவத்தாலேயே மரிப்பான். 19 ஒரு பாவி தான் செய்யும் தீமைகளை நிறுத்தி நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் வாழத்தொடங்கினால் பிறகு அவன் வாழ்வான். 20 ஆனாலும் நீங்கள் நான் நேர்மையாக இல்லை என்று இன்னும் சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இஸ்ரவேல் குடும்பத்தாரே, ஒவ்வொருவனும் தான் செய்த காரியங்களுக்காகவே நியாயந்தீர்க்கப்படுவான்!”

எருசலேம் எடுத்துக்கொள்ளப்பட்டது

21 எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் ஆண்டு பத்தாம் மாதம் (ஜனவரி) ஐந்தாம் நாளில் எருசலேமிலிருந்து ஒருவன் என்னிடம் வந்தான். அங்குள்ள போரிலிருந்து அவன் தப்பித்து வந்தான். அவன், “அந்நகரம் (எருசலேம்) எடுக்கப்பட்டது!” என்றான்.

22 இப்பொழுது, எனது கர்த்தராகிய ஆண்டவரின் வல்லமை, அந்த ஆள் என்னிடம் வருவதற்கு முன் மாலையில், என் மேல் வந்திருந்தது, தேவன் என்னை பேச முடியாதவாறு செய்திருந்தார். அந்த ஆள் என்னிடம் வந்தபோது, கர்த்தர் என் வாயைத் திறந்து மீண்டும் என்னைப் பேசும்படிச் செய்தார். 23 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார், 24 “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் அழிந்த நகரங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்கின்றனர். அந்த ஜனங்கள், ‘ஆபிரகாம் ஒருவனாயிருந்தான். தேவன் அவனிடம் இந்த நாடு முழுவதையும் கொடுத்தார். இப்பொழுது நாங்கள் பலராக இருக்கிறோம். எனவே உறுதியாக இந்நாடு எங்களுக்குச் சொந்தம்! இது எங்கள் நாடு!’ என்கிறார்கள்.

25 “கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ சொல்லவேண்டும்: ‘நீ இன்னும் இரத்தம் நீக்கப்படாத இறைச்சியைத் தின்கிறாய். உதவிக்காக நீ விக்கிரகங்களை நோக்கிப் பார்க்கிறாய். நீ ஜனங்களைக் கொன்றாய். எனவே, நான் உனக்கு இந்நாட்டை ஏன் கொடுக்கவேண்டும்? 26 நீ உன் சொந்த வாளை நம்பியிருக்கிறாய். நீங்கள் ஒவ்வொருவரும் அருவருக்கத்தக்கச் செயல்களைச் செய்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அயலான் மனைவியோடு பாலின உறவு பாவத்தைச் செய்கிறீர்கள். எனவே உங்களுக்கு இந்நாடு கிடைக்காது!’

27 “‘கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்: “என் உயிரின்மேல் ஆணை, அழிந்துபோன நகரங்களில் வாழும் அந்த ஜனங்கள் வாளால் கொல்லப்படுவார்கள் என்று நான் வாக்களித்தேன். எவனாவது நாட்டைவிட்டு வெளியே இருந்தால்,நான் அவனை மிருகங்கள் கொன்று தின்னச் செய்வேன். ஜனங்கள் கோட்டைகளுக்குள்ளும் குகைகளுக்குள்ளும் மறைந்திருந்தால். அவர்கள் நோயால் மரிப்பார்கள். 28 நான் அந்நாட்டை வெறுமையானதாகவும் பயனற்றதாகவும் செய்வேன். அந்த நாடு தான் பெருமைப்பட்டுக் கொண்டவற்றையெல்லாம் இழக்கும். இஸ்ரவேல் மலைகள் எல்லாம் காலியாகும். அந்த இடத்தின் வாழியாக எவரும் கடந்து செல்லமாட்டார்கள். 29 அந்த ஜனங்கள் பல அருவருப்பானக் காரியங்களைச் செய்திருக்கின்றனர். எனவே நான் அந்நாட்டை வெறுமையான நாடாகச் செய்வேன். பிறகு இந்த ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”

30 “‘இப்பொழுது, மனுபுத்திரனே, உன்னைப்பற்றிக் கூறுகிறேன். உன் ஜனங்கள் சுவர் ஓரங்களிலும் வீட்டு வாசல்களிலும் உன்னைக்குறித்துப் பேசுகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “வாருங்கள். கர்த்தரிடமிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம்” என்கிறார்கள். 31 எனவே அவர்கள் உன்னிடம் எனது ஜனங்களைப்போல வருகிறார்கள். அவர்கள் எனது ஜனங்களைப்போன்று உன் முன்னால் அமருகிறார்கள். அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் நீ சொல்வதைச் செய்யமாட்டார்கள். அவர்கள் தாம் நல்லதென்று எதை உணருகின்றார்களோ அவற்றையே செய்கிறார்கள். அவர்கள் பிற ஜனங்களை ஏமாற்றிப் பணம் சேர்க்கமட்டுமே விரும்புகிறார்கள்.

32 “‘இந்த ஜனங்களுக்கு நீ ஒன்றுமில்லை. ஆனால் நீ அவர்களுக்கு இன்பப் பாட்டு பாடுகிற பாடகனாய் இருக்கிறாய். உன்னிடம் இனிய குரல் உள்ளது. நீ உனது கருவிகளை நன்றாக இசைக்கிறாய். அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் நீ சொன்னபடி அவர்கள் நடக்கமாட்டார்கள். 33 ஆனால் நீ பாடுவதெல்லாம் உண்மையாக நடக்கும். பிறகு ஜனங்கள் உண்மையில் அவர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசி வாழ்ந்தான் என்று அறிவார்கள்!’”