Añadir traducción en paralelo Imprimir Opciones de la página

எரேமியா விடுதலை செய்யப்படல்

40 ராமா நகரத்தில் எரேமியா விடுதலை செய்யப்பட்டப் பிறகு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. நேபுசராதான் எனும் பாபிலோனிய அரசனது சிறப்புக் காவலாளிகளின் தளபதி ராமா நகரில் எரேமியாவைக் கண்டான். எரேமியா சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான். அவன் எருசலேம் மற்றும் யூதாவின் கைதிகளுக்கு இடையில் இருந்தான். அக்கைதிகள் பாபிலோனுக்குக் கொண்டு போவதற்காக இருந்தனர். தளபதியான நேபுசராதான் எரேமியாவைக் கண்டதும் அவனிடம் பேசினான். அவன், “எரேமியா, உனது தேவனாகிய கர்த்தர் இந்த இடத்துக்கு இப்பேரழிவு வரும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார். கர்த்தர், தான் செய்வேன் என்று சொன்னபடியே எல்லாவற்றையும் செய்திருக்கிறார். இப்பேரழிவு நடந்தது. ஏனென்றால், யூதா ஜனங்களாகிய நீங்கள் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்து கீழ்ப்படியவில்லை. ஆனால் இப்போது, எரேமியா, நான் உன்னை விடுதலை செய்கிறேன். நான் உனது மணிக்கட்டுகளிலிருந்து சங்கிலிகளை எடுத்து விடுவேன். நீ என்னோடு பாபிலோனுக்கு வர விரும்பினால் நான் உன்னை நன்றாக கவனித்துக் கொள்வேன். ஆனால், நீ என்னோடு வர விரும்பவில்லை என்றால் வரவேண்டாம். பார், நாடு முழுவதும் உனக்காகத் திறந்திருக்கிறது. நீ விரும்புகிற எங்கு வேண்டுமானாலும் போகலாம். அல்லது சாப்பானின் மகனான அகிக்காமின் மகனான கெதலியாவிடம் திரும்பிப் போகலாம். பாபிலோன் அரசன் கெதலியாவை யூதாவின் நகரங்களுக்கு ஆளுநராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். போய் ஜனங்களுக்கிடையில் கெதலியாவோடு வாழு. அல்லது நீ விரும்புகிற எந்த இடத்துக்கும் போகலாம்” என்று சொன்னான்.

பிறகு நேபுசராதான் எரேமியாவிற்கு கொஞ்சம் உணவும் பரிசுப் பொருட்களும் கொடுத்து போகச்செய்தான். எனவே, எரேமியா அகீக்காமின் மகனான கெதலியாவிடம் மிஸ்பாவுக்குப் போனான். எரேமியா கெதலியாவோடு, யூதா தேசத்தில் விடப்பட்டுள்ள ஜனங்களோடு தங்கினான்.

கெதலியாவின் குறுகிய ஆட்சி

எருசலேம் அழிக்கப்பட்டபோது, யூதாவின் படையிலுள்ள சில வீரர்களும் அதிகாரிகளும் அவர்களுடைய ஆட்களும் அத்திறந்த நாட்டிலேயே, விடுபட்டனர். அந்த வீரர்கள், அகீக்காமின் மகனான கெதலியாவைப் பாபிலோன் அரசன் தேசத்தில் விடுப்பட்டுள்ளவர்களின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தனர். விடுப்பட்டுள்ள ஜனங்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏழைகளாக இருந்தனர். இவர்கள் கைதிகளாகப் பாபிலோனுக்குக் கொண்டுப்போகப்படாமல் இருந்தனர். எனவே அவ்வீரர்கள் மிஸ்பாவிலுள்ள கெதலியாவிடம் வந்தனர். அவ்வீரர்கள்: நெத்தானியாவின் மகனான இஸ்மவேல், யோகனான், அவனுடைய சகோதரன் யோனத்தான், கரேயாவின் குமாரர்கள், தன் கூமேத்தின் மகனான செராயா, நெத்தோபாத் உரின் எப்பாயின் குமாரர்கள், மாகாத்தியாவை சார்ந்தவனின் மகன் யெசனியா, மற்றும் அவர்களோடு இருந்த மனிதர்கள்.

சாப்பானின் மகனான அகிக்காமின் மகனான கெதலியா, வந்த வீரர்களும் அவர்களோடு வந்தவர்களும் பாதுகாப்பை உணருமாறு பிரமாணம் செய்தான். கெதலியா சொன்னது இதுதான்: “வீரர்களாகிய நீங்கள், பாபிலோனிய ஜனங்களுக்கு சேவை செய்ய பயப்படவேண்டாம். இந்நாட்டில் குடியிருந்து, பாபிலோனிய அரசனுக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்தால் எல்லாம் நல்லபடியாக இருக்கும். 10 நானும் மிஸ்பாவில் வாழ்வேன். நான் உங்களுக்காக இங்கே வந்த கல்தேயரிடம் பேசுவேன். நீங்கள் அந்த வேலையை எனக்கு விட்டுவிடுங்கள். நீங்கள் திராட்சைகளை அறுவடை செய்ய வேண்டும். கோடைப் பழங்களையும், எண்ணெயையும் எடுக்க வேண்டும். நீங்கள் எதை அறுவடை செய்கிறீர்களோ அவற்றை உங்கள் சேமிப்பு ஜாடிகளில் போட்டு வையுங்கள். உங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நகரங்களில் வாழுங்கள்.” 11 மோவாப், அம்மோன், ஏதோம் மற்றும் மற்ற நாடுகளில் உள்ள அனைத்து யூதா ஜனங்களும் பாபிலோன் அரசன் யூதா தேசத்தில் யூதா ஜனங்கள் சிலரை விட்டுவிட்டுப் போயிருக்கிறான் என்று கேள்விப்பட்டனர். பாபிலோன் அரசன் சாப்பானின் மகனான அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்களின் ஆளுநாரகத் தேர்ந்தெடுத்திருப்பதைப்பற்றியும் கேள்விப்பட்டனர். 12 அந்த ஜனங்கள் இச்செய்திகளைக் கேள்விப்பட்டதும் அவர்கள் யூதா தேசத்திற்கு வந்தனர். அவர்கள் சிதறிக்கிடந்த நாடுகளில் இருந்து மிஸ்பாவிலுள்ள கெதலியாவிடம் திரும்பி வந்தனர். எனவே அவர்கள் திரும்பி வந்து திராட்சை அறுவடையையும் கோடைப் பழங்களையும் சேகரித்தனர்.

13 கரேயாவின் மகனான யோகனானும் மற்ற எல்லா யூதா படையின் அதிகாரிகளும் திறந்த நாட்டிலுள்ள அனைவரும் கெதலியாவிடம் வந்தனர். கெதலியா மிஸ்பா பட்டணத்தில் இருந்தான். 14 யோகனானும் அவனோடிருந்த அதிகாரிகளும் கெதலியாவிடம் சொன்னார்கள். “அம்மோனிய ஜனங்களின் அரசனான பாலிஸ் உன்னைக் கொல்ல விரும்புகிறான் என்பது உனக்குத் தெரியுமா? அவன் நெத்தானியாவின் மகனான இஸ்மவேலை அனுப்பியிருக்கிறான்.” ஆனால் அகிக்காமின் மகனான கெதலியா அவர்களை நம்பவில்லை.

15 பிறகு கரேயாவின் மகனான யோகனான் மிஸ்பாவில் கெதலியாவிடம் தனியாகப் பேசினான். யோகனான் கெதலியாவிடம், “நான் போய் நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலைக் கொல்லட்டுமா? இதைப்பற்றி எவரும் அறிந்துக் கொள்ளமாட்டார்கள். இஸ்மவேல் உன்னைக் கொல்லும்படி விடக்கூடாது. அது மீண்டும் உன்னைச் சுற்றியுள்ள அனைத்து யூதா ஜனங்களையும் பல்வேறு நாடுகளுக்குச் சிதறும்படிச் செய்யும். அதாவது யூதாவின் சில மீந்தவர்களும் அழியும்படி நேரும்” என்றான்.

16 ஆனால், அகிக்காமின் மகனான கெதலியா கரேயாவின் மகனான யோகனானிடம், “இஸ்மவேலைக் கொல்லாதே. நீ இஸ்மவேலைப்பற்றிச் சொல்வது எல்லாம் உண்மை அல்ல” என்றான்.