Add parallel Print Page Options

லேவியனான மனிதனும் அவனது வேலைக்காரியும்

19 அக்காலத்தில் இஸ்ரவேலருக்கு அரசன் இருக்கவில்லை. எப்பிராயீம் என்னும் மலைநாட்டில் ஒரு லேவியன் வாழ்ந்து வந்தான். அவனுடன் இருந்த வேலைக்காரி, அவனுக்கு மனைவியைப் போல வாழ்ந்து வந்தாள். அந்த வேலைக்காரி யூதா தேசத்துப் பெத்லெகேமைச் சேர்ந்தவள். அந்த வேலைக்காரி லேவியனோடு ஒரு விவாதம் செய்து அவனை விட்டுவிட்டு, யூதாவிலுள்ள பெத்லேகேமிலிருந்த தனது தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் சென்று, அங்கு நான்கு மாதங்கள் தங்கியிருந்தாள். பின்பு அவள் கணவன் அவளிடம் சென்றான். அவள் அவனோடு வரும்படி அழைப்பதற்காக அவளோடு அன்பாகப் பேச விரும்பினான். அவன் தன்னோடு தன் பணியாளையும், இரண்டு கழுதைகளையும் அழைத்துச் சென்றான். லேவியன் அவளது தந்தையின் வீட்டை அடைந்தான். லேவியனைக் கண்ட அவளது தந்தை சந்தோஷம் அடைந்து அவனை வரவேற்பதற்கு வெளியே வந்தான். அப்பெண்ணின் தந்தை லேவியனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். லேவியனின் மாமானார் அவனைத் தங்கிச் செல்லுமாறு கூறினான். எனவே லேவியன் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தான். அவன் மாமனார் வீட்டிலேயே உண்டு, பருகித் தூங்கினான்.

நான்காம் நாளில் அவர்கள் அதிகாலையில் எழுந்தனர். லேவியன் புறப்படுவதற்குத் தயாரானான். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை, தன் மருமகனைப் பார்த்து, “முதலில் ஏதாவது சாப்பிடு. சாப்பிட்டப் பின்னர் புறப்படலாம்” என்றான். எனவே லேவியனும் அவனது மாமனாரும் சாப்பிடவும் குடிக்கவும் உட்கார்ந்தனர். பின் அந்த இளம் பெண்ணின் தந்தை லேவியனை நோக்கி, “இன்றிரவு தயவுசெய்து இங்கேயே தங்கு இளைப்பாறி மகிழ்ச்சியோடு இரு. நடுப்பகல் வரைக்கும் இருந்து போகலாம்” என்றான். எனவே இருவரும் உண்ண ஆரம்பித்தனர். வேவியன் புறப்படுவதற்கு எழுந்தான். ஆனால் அன்றிரவும் அவனைத் தங்கும்படியாக அவனது மாமனார் வேண்டினான்.

பின்பு, ஐந்தாம் நாளில், லேவியன் அதிகாலையில் எழுந்தான். புறப்படுவதற்கு அவன் தயாரானான். ஆனால் அப்பெண்ணின் தந்தை மருமகனை நோக்கி, “முதலில் ஏதேனும் சாப்பிடு. களைப்பாறி நடுப்பகல் வரைக்கும் தங்கியிரு” என்றான். எனவே இருவரும் சேர்ந்து உண்டனர்.

பின் லேவியனும், அவனது வேலைக்காரியும், அவனது வேலையாளும், புறப்படுவதற்கு எழுந்தனர். ஆனால் அந்த இளம் பெண்ணின் தந்தை, “இருள் சூழ்ந்து வருகிறது. பகல் மறைய ஆரம்பிக்கிறது. எனவே இரவு இங்கே தங்கி களித்திரு. நாளைக் காலையில் சீக்கிரமாக எழுந்து உன் வழியே செல்” என்றான்.

10 மற்றொரு இரவும் தங்கியிருக்க அந்த லேவியன் விரும்பவில்லை. அவன் தன் 2 கழுதைகளோடும், வேலைக்காரியோடும் புறப்பட்டான். அவன் பயணம் செய்து எபூசை நெருங்கினான். (எருசலேமுக்கு மற்றொரு பெயர் எபூசு.) 11 பகல் கழிந்தது. அவர்கள் எபூசு நகரத்திற்கு அருகில் வந்தனர். எனவே பணியாள் எஜமானனாகிய லேவியனை நோக்கி, “இந்த எபூசு நகரத்தில் தங்கி இங்கு இரவைக் கழிப்போம்” என்றான்.

12 ஆனால் லேவியனாகிய அந்த எஜமானன், “இல்லை, இஸ்ரவேல் ஜனங்களில்லாத அந்நிய நகரத்திற்கு நாம் போகவேண்டாம், நாம் கிபியா நகரத்திற்குச் செல்வோம்” என்றான். 13 லேவியன், “வாருங்கள், நாம் கிபியாவுக்கோ, ராமாவுக்கோ செல்வோம். அந்த இரண்டு நகரங்களில் ஒன்றில் இரவில் தங்கலாம்” என்றான்.

14 லேவியனும் அவனோடிருந்தோரும் பயணத்தைத் தொடர்ந்தனர். கிபியாவில் அவர்கள் நுழைந்ததும் சூரியன் மறைந்தது. பென்யமீன் கோத்திரத்திற்குரிய பகுதியில் கிபியா இருந்தது. 15 எனவே அவர்கள் கிபியாவில் தங்கினார்கள். இரவை அந்த நகரில் கழிக்க எண்ணினார்கள். அவர்கள் நகர சதுக்கத்திற்கு வந்து அங்கு அமர்ந்தனர். ஆனால் இரவில் தங்குவதற்கு யாரும் அவர்களை அழைக்கவில்லை.

16 அன்று மாலை வயல்களிலிருந்து ஒரு முதியவன் நகரத்திற்குள் வந்தான். அவனுடைய வீடு எப்பிராயீம் மலை நாட்டிலிருந்தது. ஆனால் அவன் கிபியா நகரத்தில் வசித்துக்கொண்டிருந்தான். (கிபியாவின் ஆட்கள் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.) 17 முதிய மனிதன் நகரசதுக்கத்தில் பயணியைப் (லேவியனை) பார்த்தான். முதியவன், “எங்கு போய்க் கொண்டிருக்கிறாய்? எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டான்.

18 லேவியன், “நாங்கள் யூதாவிலுள்ள பெத்லெகேம் நகரிலிருந்து பயணம் செய்கிறோம். நாங்கள் கர்த்தருடைய கூடாரத்துக்குப் போகிறோம். நான் எப்பிராயீம் மலை நாட்டில் தொலைவான இடத்தில் வாழ்கிறவன். நான் யூதாவிலுள்ள பெத்லெகேமிற்குப் போயிருந்தேன். இப்போது என் வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறேன். 19 எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீனியும் உண்டு. எனக்கும், இளம்பெண்ணுக்கும், பணியாளுக்கும் ரொட்டியும் திராட்சைரசமும் உண்டு. எங்களுக்கு எதுவும் தேவையில்லை” என்று கூறினான்.

20 முதியவன், “நீ என் வீட்டில் வந்து தங்கலாம். உனக்குத் தேவையான ஏதாவது நான் கொடுப்பேன். ஆனால் இரவில் நகர சதுக்கத்தில் மட்டும் தங்காதே” என்றான். 21 பின்‌பு முதியவன் லேவியனையும் அவனோடிருந்தவர்களையும் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுச் சென்றான். லேவியனின் கழுதைகளுக்குத் தீனி கொடுத்தான். அவர்கள் கால்களைக் கழுவி, உண்ணவும் பருகவும் செய்தனர்.

22 லேவியனும் அவனோடிருந்தவர்களும் அவற்றை அனுபவித்துக்கொண்டிருந்த பொழுது அந்நகர மனிதர்களில் துன்மார்க்கரான சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் கதவை பலமாகத் தட்ட ஆரம்பித்தார்கள். அந்த வீட்டின் சொந்தக்காரனான முதியவனிடம் உரக்கப் பேசினார்கள். அவர்கள், “உன் வீட்டிற்கு வந்த மனிதனை வெளியே அழைத்து வா. நாங்கள் அவனோடு பாலின உறவு கொள்ளவேண்டும்” என்றனர்.

23 முதியவன் வெளியே போய், அந்த துன்மார்க்கரிடம் பேசி, “வேண்டாம், எனது நண்பர்களே, அத்தகைய தீயகாரியத்தைச் செய்யாதீர்கள். அவன் என் வீட்டு விருந்தினன். இத்தகைய கொடிய பாவத்தைச் செய்யாதீர்கள். 24 பாருங்கள், இவள் என் மகள். இதற்கு முன் பாலியல் அனுபவத்தை அறிந்ததில்லை. அவளை உங்களிடம் அழைத்து வருவேன். மேலும் எனது விருந்தினனுடைய வேலைக்காரியையும் அழைத்து வருகிறேன். உங்கள் விருப்பம் போல் அவர்களை நடத்தலாம். ஆனால் இம்மனிதனுக்கு அத்தகைய கொடுமை செய்யாதீர்கள்” என்றான்.

25 ஆனால் அந்த துன்மார்க்கர் முதியோன் கூறியதைப் பொருட்படுத்தவில்லை. எனவே லேவியன் வேலைக்காரியை அழைத்து வெளியே அனுப்பினான். அவர்கள் அவளை இராமுழுவதும் கற்பழித்து காயப்படுத்தினார்கள். அதிகாலையில் அவர்கள் அவளைப் போகவிட்டனர்.

26 விடியும்போது அவள் தன் எஜமானன் தங்கியிருக்கும் வீட்டிற்குத் திரும்பிவந்து முன் வாசலில் வந்து விழுந்தாள். வெளிச்சம் உதிக்கும்வரை அங்கேயே கிடந்தாள்.

27 வேவியன் மறுநாள் அதிகாலையில் விழித்து தன் வீட்டிற்குப் போகவிரும்பி வெளியே போவதற்காக கதவைத் திறந்த போது கதவின் நிலையில் ஒரு கை குறுக்கே விழுந்தது. அவன் வேலைக்காரி அங்கே வாசலுக்கெதிரில் விழுந்துகிடந்தாள். 28 லேவியன் அவளிடம், “எழுந்திரு புறப்படலாம்” என்றான். ஆனால் அவள் பதில் தரவில்லை (மரித்து கிடந்தாள்.)

லேவியன் தன் வேலைக்காரியை கழுதையின் மேலேற்றிக் கொண்டு, வீட்டிற்குச் சென்றான்.

29 அவன் வீட்டிற்கு வந்ததும், ஒரு கத்தியை எடுத்து அவளை 12 துண்டுகளாக வெட்டினான். அந்த வேலைக்காரியின் 12 துண்டுகளையும் இஸ்ரவேலர் வாழ்ந்த பகுதிகளுக்கெல்லாம் அனுப்பினான். 30 அதைப் பார்த்தவர்கள் எல்லோரும், “இதைப்போன்ற எதுவும் இதுவரைக்கும் இஸ்ரவேலில் நடந்ததில்லை. எகிப்திலிருந்து நாம் வந்த காலத்திலிருந்து இதைப்போன்று எதையும் பார்த்ததில்லை இதை விசாரித்து, என்ன முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றனர்.