Add parallel Print Page Options

ஏரோது இயேசுவைப்பற்றி அறிதல்(A)

14 அப்போது கலிலேயாவின் மன்னனாயிருந்த ஏரோது இயேசுவைப்பற்றி மக்கள் பேசியவைகளைக் கேள்வியுற்றான். எனவே, ஏரோது தன் வேலைக்காரர்களிடம்,, “இந்த மனிதனே உண்மையில் யோவான் ஸ்நானகன். மரணத்திலிருந்து அவன் மீண்டும் எழுந்திருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவனால் இத்தகைய அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்று கூறினான்.

யோவான் ஸ்நானகனின் மரணம்

இதற்கு முன்னர், ஏரோது யோவானைக் கைது செய்திருந்தான். ஏரோது யோவானைச் சங்கிலியால் கட்டி சிறையிலிட்டிருந்தான். ஏரோதியாளின் நிமித்தம் யோவானை ஏரோது கைது செய்திருந்தான். ஏரோதுவின் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாள். ,“நீ ஏரோதியாளை உன்னோடு வைத்திருப்பது சரியல்ல” என்று யோவான் ஏரோதுவிடம் கூறியதால் யோவானை ஏரோது கைது செய்தான். யோவான் தீர்க்கதரிசியென மக்கள் நம்பியிருந்தார்கள். எனவே, யோவானைக் கொல்ல விரும்பிய ஏரோது பயந்தான்.

ஏரோதின் பிறந்த நாளன்று, ஏரோதியாளின் மகள் ஏரோதுவையும் அவன் நண்பர்களையும் மகிழ்விக்க நடனமாடினாள். அவள் நடனத்தால் ஏரோது மிக மகிழ்ந்தான். எனவே, அவள் எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்தான். தன் மகள் எதைக் கேட்கவேண்டும் என்பதை ஏரோதியாள் முன்னமே அறிவுறுத்தியிருந்தாள். ஆகவே, அவள் ஏரோதுவிடம்,, “எனக்கு யோவான்ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்துத் தாருங்கள்” என்று கூறினாள்.

இதனால் மன்னன் ஏரோது மிகுந்த துக்கம் கொண்டான். ஆனால் தன் மகள் எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்திருந்தான். ஏரோதுவுடன் உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் அவன் வாக்குறுதியைக் கேட்டிருந்தார்கள். எனவே, அவள் விரும்பியதை நிறைவேற்ற ஏரோது கட்டளையிட்டான். 10 சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டுவதற்கு அவன் ஆட்களை அனுப்பினான். 11 அவர்கள் யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து அதை அவளிடம் கொடுத்தனர். பின்னர், அப்பெண் அத்தலையைத் தன் தாய் ஏரோதியாளிடம் எடுத்துச் சென்றாள். 12 யோவானின் சீஷர்கள் அவனது உடலைப் பெற்று அடக்கம் செய்தனர். பின், அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.

5,000 பேருக்கு உணவளித்தல்(B)

13 யோவானுக்கு நேர்ந்ததைக் கேள்வியுற்ற இயேசு, ஒரு படகில் புறப்பட்டுச் சென்றார். யாருமற்ற ஒரு தனியிடத்திற்குத் தன்னந்தனியே சென்றார். இயேசு புறப்பட்டுச் சென்றதை மக்கள் கேள்விப்பட்டனர். எனவே, அவர்களும் தங்கள் நகரங்களை விட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு சென்ற இடத்திற்கு அவர்கள் தரை வழியே சென்றனர். 14 இயேசு அங்கு வந்த பொழுது, அங்கே ஏராளமான மக்களைக் கண்டார். அவர்களுக்காக வருத்தமுற்ற இயேசு, அங்கிருந்த நோயாளிகளைக் குணப்படுத்தினார்.

15 அன்று பிற்பகல், இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து,, “மனிதர் யாரும் இங்கு வசிப்பதில்லை. மேலும் நேரமுமாகிவிட்டது. மக்களைத் திருப்பி அனுப்புங்கள். அப்பொழுதுதான் அவர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று உணவை வாங்க முடியும்” என்று சொன்னார்கள்.

16 இயேசு,, “மக்கள் திரும்பிச் செல்லவேண்டியத் தேவையில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு அளியுங்கள்” என்று பதிலளித்தார்.

17 அதற்குச் சீஷர்கள்,, “ஆனால், நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தானே உள்ளன” என்று பதில் சொன்னார்கள்.

18 ,“அப்பத்தையும் மீனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று இயேசு கூறினார். 19 பிறகு, அங்கிருந்த மக்களை இயேசு புல்வெளியில் அமரச் சொன்னார். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கையிலெடுத்துக் கொண்டார். இயேசு வானத்தைப் பார்த்து அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களைச் சீஷர்களிடம் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். 20 மக்கள் அனைவரும் திருப்தியாக உண்டார்கள். மக்கள் உண்டது போக எஞ்சிய உணவைப் பன்னிரெண்டு கூடைகளில் நிரப்பினார்கள். 21 அங்கு சுமார் ஐயாயிரம் ஆண்கள் உணவு உண்டனர். மேலும், பல பெண்களும் குழந்தைகளும் கூட உணவு உண்டனர்.

இயேசு தண்ணீரின் மேல் நடத்தல்(C)

22 பிறகு இயேசு தமது சீஷர்களைப் படகில் ஏறச் சொன்னார். இயேசு அவர்களை ஏரியின் மறுகரைக்குப் போகச் சொன்னார். தாம் பின்னர் வருவதாக அவர்களிடம் கூறினார். 23 மக்களிடம் விடை பெற்றுக்கொண்ட இயேசு குன்றின்மீது ஏறினார். தனியே பிரார்த்தனை செய்வதற்காக இயேசு அங்கு சென்றார். 24 அந்தச் சமயம், படகு ஏற்கெனவே வெகு தொலைவு சென்றிருந்தது. படகு அலைகளினால் தொல்லைகளுக்கு உள்ளானது. படகு சென்ற திசைக்கு எதிராகக் காற்று வீசியது.

25 அதிகாலை, மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை இயேசுவின் சீஷர்கள் படகிலேயே இருந்தனர். இயேசு தண்ணீரின் மேல் நடந்து அவர்களிடம் வந்தார். 26 இயேசு தண்ணீரின் மேல் நடப்பதைக் கண்ட சீஷர்கள் பயந்து போனார்கள்., “அது ஒரு ஆவிதான்” என்று அவர்கள் பயத்தில் அலறினார்கள்.

27 உடனே இயேசு அவர்களிடம்,, “கவலை கொள்ளாதீர்கள். நான்தான்! பயப்படாதீர்கள்” என்று கூறினார்.

28 அதற்குப் பேதுரு,, “ஆண்டவரே, மெய்யாகவே இது நீர்தானென்றால், என்னை உம்மிடம் தண்ணீரின் மேல் நடந்துவரக் கட்டளையிடும்” என்று சொன்னான்.

29 இயேசு அவனிடம்,, “வா, பேதுரு” என்று கூறினார்.

பின்னர், பேதுரு படகிலிருந்து இறங்கி, தண்ணீரின் மேல் இயேசுவை நோக்கி நடந்தான். 30 ஆனால், தண்ணீரின் மேல் நடந்து சென்றபொழுது பேதுரு காற்றடிப்பதையும் அலைகள் வீசுவதையும் கண்டான். பயந்து போன பேதுரு, நீரில் மூழ்க ஆரம்பித்தான். உடனே பேதுரு,, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று அலறினான்.

31 உடனே இயேசு தமது கையால் பேதுருவைப் பற்றிக்கொண்டார். இயேசு அவனிடம்,, “உன் விசுவாசம் சிறியது. நீ ஏன் சந்தேகம் கொண்டாய்?” என்று சொன்னார்.

32 பேதுருவும் இயேசுவும் படகில் ஏறியதும் காற்று அமைதியடைந்தது. 33 அதன் பிறகு படகிலிருந்த சீஷர்கள் இயேசுவை வணங்கி,, “உண்மையிலேயே நீர் தேவகுமாரன்தான்” என்று சொன்னார்கள்.

அநேக நோயாளிகளை இயேசு குணமாக்குதல்(D)

34 அவர்கள் ஏரியைக் கடந்து, கெனசெரேத்து என்ற இடத்தை அடைந்தார்கள். 35 அங்கிருந்த மக்கள் இயேசுவைக் கண்டனர். அவர்கள் அவர் யார் என்பதை அறிந்திருந்தனர். எனவே, அவர்கள் அப்பிரதேசத்தைச் சுற்றியிருந்த மற்றவர்களிடம் இயேசு வந்திருப்பதைக் கூறினார்கள். நோயாளிகள் அனைவரையும் இயேசுவிடம் அழைத்து வந்தனர். 36 அவரது மேலாடையைத் தொடுவதற்கு மட்டுமாவது அனுமதித்து குணம் பெறத் தங்களை அனுமதிக்குமாறு இயேசுவிடம் மக்கள் கெஞ்சிக் கேட்டனர். இயேசுவின் மேலாடையைத் தொட்ட நோயாளிகள் அனைவரும் குணமடைந்தனர்.