Add parallel Print Page Options

அசுத்த ஆவி துரத்தப்படுதல்(A)

இயேசுவும் அவரது சீஷர்களும் அக்கடலைக் கடந்து அக்கரைக்குச் சென்றார்கள். அங்கு கதரேனர் என்ற மக்கள் வாழ்ந்து வந்தனர். படகிலிருந்து இயேசு இறங்கியதும் இறந்த மக்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த குகைகளிலிருந்து ஒரு மனிதன் வெளியே வந்தான். அந்த மனிதனை அசுத்த ஆவிகள் பிடித்திருந்தன. அவன் எப்போதும் கல்லறையிலேயே குடியிருந்தான். அவனை எவராலும் கட்டிப்போட முடியவில்லை. பலமுறை மக்கள் அவனது கைகளையும் கால்களையும் விலங்குகளாலும், சங்கிலிகளாலும் கட்டிப்போட்டிருந்தனர். ஆனால் அந்த மனிதன் அச்சங்கிலிகளையும் விலங்குகளையும் அறுத்து எறிந்துவிடுவான். அவனைக் கட்டுப்படுத்தும் பலமுள்ள மனிதன் எவனும் அங்கில்லை. இரவும், பகலும் அவன் கல்லறைக் குகைகளைச் சுற்றியும் மலைப் பகுதிகளிலும் திரிந்துகொண்டிருந்தான். அவன் கூக்குரலிட்டுக்கொண்டும், கற்களால் தன்னைக் காயப்படுத்திக்கொண்டும் இருந்தான்.

தொலைவில் இயேசு வந்துகொண்டிருக்கும்போதே அவரைப் பார்த்துவிட்டான் அவன். ஓடி வந்து அவர் முன்னால் பணிந்து நின்றான். 7-8 இயேசு அவனிடம், “அசுத்த ஆவியே, இந்த மனிதனை விட்டு வெளியே போ” என்று சொன்னார். உடனே அவன் உரத்த குரலில் “இயேசுவே! மகா உன்னத தேவ குமாரனே! என்னிடம் என்ன விரும்புகிறீர்? என்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று தேவனிடம் ஆணையாய் உம்மைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்றான்

பிறகு இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் லேகியோன், [a] ஏனென்றால் எனக்குள்ளே பல ஆவிகள் உள்ளன” என்று அவன் சொன்னான். 10 அத்தோடு அவனுக்குள்ளே இருந்த ஆவிகள் தங்களை அந்தப் பகுதியைவிட்டுத் துரத்தக் கூடாது என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டன.

11 அப்பொழுது அந்த மலையருகே பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. 12 அசுத்த ஆவிகள் இயேசுவிடம், “எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பிவிடுங்கள்” எனக் கேட்டுக்கொண்டன. 13 அவ்வாறே போகும்படி இயேசு அனுமதி அளித்தார். அசுத்த ஆவிகள் அந்த மனிதனை விட்டு விட்டு பன்றிகளுக்குள் புகுந்து கொண்டன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து ஓடி கடலுக்குள் பாய்ந்து கடலில் மூழ்கி இறந்தன. அவை ஏறக்குறைய 2,000 எண்ணிக்கை உடையதாக இருக்கும்.

14 பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். அவர்கள் பட்டணத்துக்கும், வயல்வெளிக்கும் சென்றார்கள். அங்கு சந்தித்த மக்களிடமெல்லாம் இதனைச் சொன்னார்கள். மக்களும் என்ன நடந்தது என்பதை அறிய வந்தனர். 15 அவர்கள் இயேசுவிடம், வந்தார்கள். பல அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டிருந்தவனையும், அவர்கள் பார்த்தார்கள். அவன் ஆடைகள் அணிந்து அமைதியாய் இயேசுவின் காலடியில் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனது மனநிலை சரியாக இருந்தது. மக்கள் இவற்றைக் கண்டு அச்சப்பட்டனர். 16 இயேசு செய்தவற்றைப் பார்த்திருந்த சிலரும் அங்கே இருந்தனர். இவர்கள் மற்றவர்களிடம் அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டவனின் செயல்களையும் இயேசு அவனைக் குணப்படுத்தியதையும் கூறினர். அவர்கள் பன்றிகளுக்கு ஏற்பட்டதையும் சொன்னார்கள். 17 பிறகு அந்த மக்கள், இயேசுவிடம் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுச் செல்லும்படி வேண்டினர்.

18 படகின் மூலம் அவ்விடத்தை விட்டுச் செல்ல இயேசு தயாரானார். பிசாசுகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மனிதன் தன்னையும் இயேசுவோடு வர அனுமதிக்கும்படி வேண்டிக்கொண்டான். 19 ஆனால் இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அவனிடம் இயேசு, “நீ வீட்டுக்குப் போ. உன் குடும்பத்தாரையும், நண்பர்களையும் சென்று பார்த்து உனக்காகக் கர்த்தர் செய்தவற்றை எல்லாம் அவர்களிடம் கூறு. அவர் உனக்குக் கருணை செய்தார் என்றும் கூறு” என்றார்.

20 எனவே அவன் அவ்விடத்தை விட்டுப் போய் தெக்கப்போலி பகுதி மக்களிடம் தனக்கு இயேசு செய்ததைக் கூற ஆரம்பித்தான். மக்கள் அவற்றைக் கேட்டு வியப்பு அடைந்தனர்.

உயிரடைதலும், நோயாளி குணமாகுதலும்(B)

21 படகிலேறி இயேசு கடலின் அக்கரைக்குத் திரும்பிச் சென்றார். அக்கரையில் ஏராளமான மக்கள் கடற்கரையிலிருக்கும்போது இயேசுவைச் சுற்றிக் கூடினர். 22 அப்பொழுது, ஜெப ஆலயத் தலைவர்களுள் ஒருவன் அங்கு வந்தான். அவன் பெயர் யவீரு. அவன் இயேசுவைப் பார்த்ததும் அவரைப் பணிவுடன் குனிந்து வணங்கினான். 23 அவன் இயேசுவை மேலும் மேலும் பணிந்தான். அவன் “என்னுடைய சின்ன மகள் செத்துக்கொண்டிருக்கிறாள். தயவுசெய்து அங்கு வந்து அவள் மீது உங்கள் கைகளை வைக்க வேண்டும். அதனால் அவள் குணம் பெற்று வாழ்வாள்” என்றான்.

24 ஆகையால் இயேசு அவனுடன் சென்றார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் அவரை நெருக்கிக்கொண்டு சென்றனர்.

25 அம்மக்களின் நடுவில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கால் அவதிப்பட்டு வந்தாள். 26 அவள் மிகவும் துன்பப்பட்டு விட்டாள். ஏராளமான மருத்துவர்கள் அவளுக்கு உதவ முயற்சி செய்தனர். அவளிடமிருந்த செல்வமெல்லாம் செலவழிந்தது. ஆனால் குணமாகவில்லை. அவள் மேலும் நோயால் துன்பப்பட்டாள்.

27 அவள் இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாள். ஆகையால் அவள் இயேசுவிடம் கூட்டத்திற்குள் வந்தாள். அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டாள். 28 அவளோ, “நான் அவரது ஆடையைத் தொட்டாலே போதும். நான் குணமாகிவிடுவேன்” என்று நம்பினாள். 29 அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டதும் அவளது இரத்தப் போக்கு நின்றது. தான் நோயிலிருந்து குணமாகிவிட்டதை அவள் சரீரத்தில் உணர்ந்தாள். 30 இயேசுவும் தன்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை அறிந்தார். எனவே, அவர் நின்று சுற்றிலும் பார்த்தார். பிறகு அவர், “என் ஆடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.

31 இதனைக் கேட்டதும் சீஷர்கள் “போதகரே, ஏராளமான மக்கள் உங்களை நெருக்கிக்கொண்டு வருகிறார்கள். ‘யார் என்னைத் தொட்டது’ என்று கேட்கிறீரே” என்றனர்.

32 ஆனால் இயேசுவோ தன்னைத் தொட்டவருக்காகத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். 33 அந்தப் பெண்ணும் தான் முழுமையாகக் குணம் பெற்றதை உணர்ந்தாள். எனவே அவள் இயேசுவின் முன்வந்து அவரைப் பணிந்தாள். அவள் பயத்தால் நடுங்கினாள். அவள் தன் கதை முழுவதையும் இயேசுவிடம் கூறினாள். 34 இயேசு அவளிடம், “அன்பான பெண்ணே! உன் விசுவாசத்தினால் நீ சுகமானாய். சமாதானமாகச் செல். இனி மேல் உனக்கு ஒரு துன்பமும் இல்லை” என்றார்.

35 இவ்வாறு இயேசு அங்கே பேசிக்கொண்டிருந்தபோது யவீருவின் வீட்டிலிருந்து சிலர் வந்தனர். அவர்கள் யவீருவிடம், “ஐயா, உங்கள் மகள் இறந்துபோனாள். எனவே, இனிமேல் இந்தப் போதகருக்கு (இயேசுவுக்கு) எந்தத் தொந்தரவும் கொடுக்க வேண்டாம்” என்றனர்.

36 அந்த மக்கள் சொன்னதைப்பற்றி இயேசு கவலைப்படவில்லை. அந்த ஜெப ஆலயத்தலைவரிடம் இயேசு, “பயப்பட வேண்டாம். விசுவாசத்துடன் இரு” என்று கூறினார்.

37 மற்ற அனைவரையும் விட்டு பேதுரு, யாக்கோபு, யாக்கோபுவின் சகோதரனான யோவான் ஆகியோரை மட்டும் தன்னுடன் வர இயேசு அனுமதித்தார். 38 இயேசு இம்மூன்று சீஷர்களோடு மட்டும் யவீருவின் வீட்டுக்குச் சென்றார். அங்கு நிறையப்பேர் கதறி அழுதுகொண்டிருப்பதைக் கண்டார். அந்த இடம் ஒரே குழப்பமாய் இருந்தது. 39 இயேசு அவ்வீட்டுக்குள் நுழைந்து அவர்களிடம், “ஏன் நீங்கள் இவ்வளவு அழுது சத்தமிடுகிறீர்கள்? இக்குழந்தை சாகவில்லை. இது தூங்கிக் கொண்டுள்ளது” என்றார். 40 இதைக்கேட்ட மக்கள் இயேசுவைப் பார்த்து சிரித்தார்கள்.

இயேசு அம்மக்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் அக்குழந்தை கிடத்தப்பட்டிருந்த அறைக்குள் சென்றார். அவர் தன்னோடு அக்குழந்தையின் தாய், தந்தை, மூன்று சீஷர்கள் ஆகியோரை மட்டும் அனுமதித்தார். 41 அவர் அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக்கொண்டு, “தலீத்தாகூமி!” என்று சொன்னார். (அதற்கு, “சிறுமியே, நான் சொல்கிறேன் நீ எழுந்திரு” என்று பொருள்.) 42 அச்சிறு பெண்ணும் உடனே எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு அப்போது பன்னிரண்டு வயது. அப்பெண்ணின் தாயும், தந்தையும், சீஷர்களும் வியப்படைந்தனர். 43 இயேசு அப்பெண்ணின் பெற்றோரிடம் இதைப்பற்றி யாரிடமும் எதுவும் கூற வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினார். பிறகு அப்பெண்ணுக்கு உண்ண உணவு அளிக்குமாறு சொன்னார்.

Footnotes

  1. மாற்கு 5:9 லேகியோன் இதற்கு ஏராளம் என்று பொருள். இதற்கு 5000 ஆட்கள் கொண்ட ரோமானிய படை எனப் பொருள்.